Thursday 2 February, 2012

சென்னை விமான நிலையமா இது?




         I-DISO - Alitalia Boeing 777-200ER aircraft
                             


சென்னை விமான நிலையமா இது?

.சென்னை விமான நிலையமா இது?
நம்ப முடியாத அளவிற்கு மாற்றங்கள்!!!!
எண்பதுகளில் டக்கோடா,பிரன்ஷிப்,போயிங், ஜம்போ என பல வகையான விமானங்கள், அலுமினிய பறவைகளாக வீடு அதிரும்படி மேலே பறக்கும். அப்போது கிண்டியில் இருந்தோம். அண்ணாந்து பார்த்தால் முன்பக்க சக்கரம்
மெதுவாக இறக்கப்படுவதை காணலாம். விமானங்களின் நிழல் வீடுகளின் மீது போய்க்கொண்டிருக்கும். மீனம்பாக்கத்தில் இறங்கும்போது பெரிய ஓசை  இங்கே கேட்கும். காரவீல் எனும் விமானம் வீட்டை கடக்கும்போது அதிர்வும்,ஓசையும் மிகவும் அதிகமாக இருக்கும்.
அப்பாவுடன் :::
அப்பாவுடன் முதலில் விமான நிலையத்திற்கு சென்று பார்த்தபோது நுழைவுக் கட்டணம் இல்லை.ஹிந்து பேபரின் இரண்டு குட்டி விமானங்களும்(பெங்களூர்,மதுரை,கோவை,விஜயவாடா ஆகிய இடங்களுக்கு இங்கிருந்துதான் பேப்பர் செல்லும்) பிளையிங் கிளப் குட்டி விமானங்களும் வரிசை கட்டி நிற்கும்.
15 ஆண்டுகளுக்கு பிறகு ::::
அதற்கடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முக்கியமான மீடிங்கிற்காக அவசரமாக பெங்களூருக்கு வரசொல்லி விமான டிக்கட் அனுப்பினார்கள். ஊர் நமக்கு புதியதல்ல.வாகனம் புதியது. (அப்பாவுடன், பல வருடங்களுக்கு முன் வந்தது நினைவிற்கு வந்தது மட்டுமல்லாமல், அப்போது அவர் உயிருடன் இல்லாததும் வருத்தமாயிருந்தது.
அம்மாவிடம் சொன்னால் பயப்படுவார்கள் என்று சொல்லவில்லை.இரவே திரும்பிவிட்டதால் பிரச்சினை இல்லை.)
உடன் மேலதிகாரியும் வந்ததால் மீட்டிங்கில் என்ன எடுத்து சொல்லவேண்டும் 
என்பதை பற்றி விவாதித்துக்கொண்டே வந்ததில் ஊர் வந்ததே தெரியாமல் உட்கார்ந்து பேசிக்கொண்டேயிருந்தோம். ஏர்-ஹோஸ்டஸ் வந்து சொன்னதும், தெரிந்தாற்போல சமாளித்து வெளியே வந்தோம்.
மூன்றாவது முறை ::::::
அடுத்தது கொச்சியில் இருந்தபோது, மாலை சென்னையில் இருக்கவேண்டிய கட்டாயம்.அலுவலகத்தில் இருந்து உடனே வரச்சொன்னார்கள்.அந்த பயணம் தான் நின்று நிதானமாக வெளியில் பார்த்து ரசித்து வந்தேன்.
எல்லா பயணங்களிலும், பயணிகளின் எண்ணிக்கை, 15 லிருந்து 30 ஐ தாண்டாது.
இன்று காலை 
இன்று காலை மகனும் மகளும் மும்பைக்கு செல்ல டிக்கட் எடுத்திருந்தார்கள்.இன்றும் நாளையும் விடுமுறை திங்கள் செவ்வாய் சேர்த்தால் 4 நாட்கள்.
காலையில் அவர்களை எழுப்பி (இரவு இரண்டு மணிக்குத்தான் படுத்தார்கள்)கால் டாக்சியில் சென்று திருசூலம் உள்நாட்டு நிலையம் அடைந்தோம்.
பிராட்வே பஸ் ஸ்டாண்ட்   
விசிட்டர்கள் உள்ளேஅனுமதி இல்லை. வெளியே சங்கீதா ஹோட்டல் (டீ கடை  லுக்கு!)
மேம்பாலத்திற்கு கீழே, நாற்காலிகளில், விமானத்தில் வந்த பயணிகள்.சூபர் பஜாரில் இருப்பது போல தள்ளு வண்டிகள்.அதில் பெட்டி லக்கேஜுகள்.
பிராட்வே பஸ் ஸ்டாண்ட் ரேஞ்சுக்கு இருந்ததை பார்த்ததும் ஜீரணிக்கவே முடியவில்லை.
வாரிசுகளிடம் சொல்லிவிட்டு கிளம்பிய போது என்னவோ போல இருந்தது.
எதிரே இருக்கும் திருசூலம் ஸ்டேஷனில் பிளாட்பார்மில் நின்று பிளைட் டேக் ஆப்- ஆகும்வரை காத்திருந்தபோது சிவப்பு பட்டையுடன் சரியான நேரத்தில் 
பரங்கிமலைக்கு மேலே "மீன் கொத்தி"போல அலுமினிய பறவை பறந்தது,என் மக்களை சுமந்து கொண்டு. 
அப்பாவின் நினைவு வந்து கண்களை நீரால் நிரப்பியது.

0 கருத்துரைகள்:

No comments: